இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான். அந்த வகையில் 1948-ம் ஆண்டே இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் வி.கே கிருஷ்ணன் மேனன்.
அதைத் தொடர்ந்து, போபர்ஸ் ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், கோல்ப் கார்ட் ஊழல், சுக்னா ரியல் எஸ்டேட் ஊழல், ராபேல் ஊழல் என்று சகலத்திலும் ஊழல் நிறைந்தது தான் இந்திய இராணுவம். ஒன்னு ஒன்னா பார்ப்போம்.
போபர்ஸ் ஊழல்:
சுவீடன் நாட்டு போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக,1986-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது. ஊழலும் மறைக்கப்பட்டது.
சவப்பெட்டி ஊழல்:
கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான சவப்பெட்டிகளை வாங்க, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சவப்பெட்டிகளுக்கு உண்மையான விலையை விட, 13 மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவிர, மூன்று ராணுவ அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது. இறுதியில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ அறிவித்ததால், வழக்கு இழுத்து மூடப்பட்டது.
இராணுவ டிரக்கு வண்டி ஊழல்:
தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி. டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது.
பிரதமர் - ஜனாதிபதிக்கான விமானம் வாங்குவதில் ஊழல் :
இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு CBI விசாரணை என்ற பெயரில் மறைக்கடிக்கப்பட்டது.
தார்பாய் ஊழல்:
இந்திய இராணுவம் ட்ரெண்ட் போடவும், விருப்புக்கும் பயன்படுத்தும் தார்பாய்கள் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும். ஆனால் அதே தார்பாயை 30,000 ரூபாய் செலவு செய்து டாட்ரா நிறுவனத்தில் இருந்து இராணுவத்திற்கு வாங்குகிறது.
ஆதர்ஷ் ஊழல் - கார்கில் போரில் உயிரிழந்தோர் வீட்டுமனை ஊழல் :
மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு. இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியது.
முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.
டப்பா மட்டன் ஊழல் - ஆட்டுக்கறி ஊழல் :
1987-1988 ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கு டப்பா இறைச்சி வாங்கியதில் ஊழல் தொடர்பான வழக்கில் 22 கழித்து ஊழல் நிரூபணமாகி தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது
1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்தில் ‘ஆபரேஷன் பவன்’ நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. பின்னர், அந்த இயக்கம் முழு வீச்சான போராக மாறியதும் படைகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 6,000லிருந்து, 1 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இலங்கையில் தமது வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை போதுமான அளவில் வாங்க முடியாமல் திணறிய ராணுவத்தின் நிலையை பயன்படுத்திக் கொண்டு ஊழல் புரிந்ததாக இரு ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டு 22 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய ராணுவத்துக்கு உணவுப் பொருட்கள் வாங்கி அனுப்பும் பொறுப்பு ராணுவத்தின் தெற்கு மண்டல ஆணையகத்தின், வழங்கல் துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அனந்த் குமார் குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஒரு இராணுவ மேஜர் ஜெனரலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவருக்கு கீழ் வேலை செய்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னலுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியிருக்கிறது.
ராஃபேல் ஊழல் - போர் விமான ஊழல் :
2012-ம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 நவீன ரக போர்விமானங்களை (18 விமானங்கள் பறக்கும் நிலையில்) அன்றைய மதிப்பில் சுமார் ரூ 54,000 கோடி செலவில் கொள்முதல் செய்வது, 108விமானங்களை இந்திய அரசின் HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை அடக்கம்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை ஏறத்தாழ ரூ 60,000 கோடி கொடுத்து வாங்க வேண்டும், தொழில்நுட்ப பரிமாற்றம் கிடையாது. முக்கியமாக HAL நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, அனில் அம்பானி புதிதாகத் திறந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் மூலமாக விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூ 700 கோடியிலிருந்து ரூ 1600 கோடியாக இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது, HAL நிறுவனத்திடம் இருந்து ரிலையன்சுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது.
இதில்தான் ரூ 30,000கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பா.ஜ.க தலைவர்களும் கூறுகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இதுதொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டது. ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகியவற்றில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, விசாரணை நடந்துவருகிறது. ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் மோடி அரசு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் இதைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பைக் கொச்சை படுத்துகின்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜீப் வண்டி ஊழல் :
2012ம் ஆண்டு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங், ‘இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் தனக்கு ரூ 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக’ குற்றம் சாட்டியிருந்தார். வழக்கு மறைக்கடிக்கப்பட்டது.
ராணுவ வீரர் பாதுகாப்பு கவசம் மற்றும் பொருட்களில் ஊழல் :
உயரமான மலைப் பகுதிகளில் பணி புரியும் படை வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் ஊழல் தொடர்பாக அப்போதைய இராணுவ சேவைப் பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சஹானி 2011ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
லடாக் மட்டன் ஊழல் :
லடாக் பகுதி படைவீரர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே தாஹியா மீது விசாரணை நடந்தது. வழக்கு மறைக்கடிக்கப்பட்டது.
தரமில்லாத துப்பாக்கி ரவை குண்டுகள் என புகார் :
"அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.
சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறது.
“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் அறிக்கையின் பொருள். "அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியில் தினமணியில் வெளியான செய்திதான்.
இராணுவ வீரர்களை பட்டினி போட்டு உணவில் ஊழல் :
தேஜ் பகதூர் யாதவ் என்றொரு இராணுவ வீரர், தங்களுக்குக் கொடுக்கப்படும் ரொட்டிக்கு சப்ஜி தரப்படுவதில்லை என்றும், பல நேரங்களில் இராணுவ வீரர்கள் அரைப் பட்டினியாகக் கிடக்குமாறு விடப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி, வாட்ஸ் அப் வீடியோவொன்றை வெளியிட்டார்.
அரசு நடத்தும் மாணவர் விடுதிகளில்தான் இப்படியெல்லாம் கேவலமாக ஊழல் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது. ரொட்டிக்கு குருமாகூடத் தராமல் கமிசன் பார்க்கும் இந்திய இராணுவ அதிகாரிகள், பார்டரில் விட்டு கொலை செய்வதற்கா அஞ்சப் போகிறார்கள்?
கடந்த பல பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட இராணுவத்தின் அதிகார வர்க்கம், ஊழலிலும் உல்லாச சொகுசு வாழ்க்கையிலும் ஊறித் திளைத்துக் கிடக்கிறது. இங்கு வேண்டும் மட்டும் கறந்து கொள்ளலாம், கேள்வி முறை கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது, தணிக்கை கிடையாது. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.
மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கும், பாதுகாப்பு துறை அரசியல்வாதிகளுக்கும் வாய்க்கிறது.
2018-2019-க்கான மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில இருக்கிறது இந்தியா. புதிய இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் நடக்கும் ஊழல்களும் வரிப்பணக் கொள்ளையும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.
No comments:
Post a Comment