சாதி என்பது சமூகத்தை ஏணிப்படி வரிசையில் கட்டமைக்கிறது. ஒரு சாதிக்குக் கீழ் இன்னொரு சாதி. இந்த அடுக்கின் உச்சியில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். கீழடுக்கில் தாழ்த்தப்பட்ட, தீண்டாமை சுமத்தப்பட்ட சாதி மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சாதிய அடுக்குகளில் பெண்கள் ஒவ்வொரு சாதி ஆண்களின் தலைமைக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கிறாள். அந்த ஆண்களின் ஆதிக்கத்திற்குள் பெண் வைக்கப்படாவிட்டால் அடுத்த தலைமுறை, அந்தந்த சாதிக்குள் பிறக்க வழியில்லாமல் போய்விடும். எனவே பெண்ணை அடிமையாக வைத்திருப்பது ‘சாதி அமைப்பின்’ கட்டாயத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பெண்ணின் மீது ‘கற்பு நெறி’ திணிக்கப்படுகிறது. இந்த சமூகக் கட்டுப்பாடுகள் சிதைக்கப்பட்டுச் சாதி அமைப்புக் கெட்டுப் போய்விடக் கூடாது என்ற நோக்கத்துடன்தான் மிகக் கொடுமையான விதவை நிலையும், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக நடவடிக்கைகளும் இந்து தர்மத்தில் இடம் பெற்றுள்ளன. பெண்ணை விவரமறியுமுன்னே திருமணம் செய்து கொடுத்து விடும் குழந்தைத் திருமண முறையும் இந்த நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதுதான்.
சாதி.... பிறவியை அடிப்படையாகக் கொண்டது. பிறக்கின்ற பிள்ளை ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறக்க வேண்டும் என்று சொன்னால் பெண்ணின் கர்ப்பப்பையைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவேதான் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என சாதிய ஆதிக்கம் வரையருத்துள்ளது.
இந்த சாதிய ஆணாதிக்க வரையறைக்குள் ஒரு பெண் ஆணுக்கு அடிமையாய் இருக்கிறாள், ஒரு அடிமை ஆணுக்கும் அடிமையாய் இருக்கிறாள் என்று தெளிவாக விளக்கிய அம்பேத்கர் "சமூதாய முன்னேற்றம் என்பது பெண்கள் முன்னேற்றத்தால் தான் அமையும் என்று உறுதியாக கூறினார்.
புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம், பொது சவுதார் குளத்திற்கான் போராட்டம், ஊர்வலம், மாநாடு போன்ற நிகழ்வுகளில் வீட்டு பெண்கள் அதிகமாக கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதிநிதிகளுக்கு கட்டளையிட்டார்.
பெண்கள் சம அந்தஸ்தில் வாழவேண்டும், பிறரை சாராமல் வாழவேண்டும் என்று பெண்களுக்கான சட்டங்களை போராடி பெற்று தந்தார்.
அன்றைய இந்து சட்டத்தின் படி சொத்துரிமை, குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மட்டுமே உண்டு. அதில் இளையவர்கள் (ஆண்களாக இருந்தாலும்) பாகப் பிரிவினை கோர முடியாது. பெண்களுக்கு எந்தச் சொத்துரிமையும் எப்போதும் வராது. இதற்கு மாறாக அம்பேத்கர், ஒருவர் இறந்தவுடன் அவரது சொத்தில் அவரது மனைவிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சொத்துரிமை வருகின்ற வாரிசுரிமை முறையை முன்மொழிந்திருந்தார். மகனுக்கு உரிமை உள்ளது போல் மகளுக்கும் பாதி கொடுங்கள் என்றுதான் திருத்தம் கொண்டு வந்திருந்தார்.
கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண்களுக்கான ஜீவனாம்ச உரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பதிவுத் திருமணம் மற்றும் கலப்புத் திருமணத்திற்கான அங்கீகாரம் சட்டமேற்ற கோரிக்கை வைத்த அண்ணல், பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சாதி, கோத்திரம் மற்றும் இதர உறவு முறை தடையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
பலதார மணமுறைத் தடை மற்றும் விவாகரத்து உரிமை பற்றி கூறுகையில், அது மனைவியின் சம்மதத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதை முன்வைத்தார்.
சட்டத்தில் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, விவாகரத்து உரிமை, சொத்து உரிமை உள்பட பலவற்றை முன்வைத்தார் அம்பேத்கர். ஆனால், அவற்றுக்குப் பாராளுமன்ற குழு ஏராளமான முட்டுக்கட்டைகளைப் போட்டது. பிறகு, திருமணம் மற்றும் மணவிலக்கு போன்றவற்றுக்கு அனுமதி என்பதாகப் பேச்சு எழுந்தது, ஆனால், இறுதியில் பெண்களுக்கான பல உரிமைகளை மறுத்தது.
அப்போதைய ஆட்சியாளர்களின் இத்தகைய முடிவினால் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அம்பேத்கர் முன்மொழிந்த பெண்களுக்கான சட்டங்கள் எல்லாம் 1948 இல் இந்த நாடு விடுதலையடைந்தவுடன் அம்பேத்கர் இந்த நாட்டின் பெண்ணினத்துக்குப் பெற்றுத் தரத் துடித்த உரிமைகளாகும். ஆனால் அன்றைய நிலையில் நேரு தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் சானாதனவாதிகள், மதவாதிகள் இது இந்து தர்மத்திற்கு எதிரானது என்று பெண்களுக்கான சட்ட மசோதாவை வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
தலைவர் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்பு பல பேர் தீண்டாமைக்கு எதிராகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பேசி வந்திருக்கிறார்கள், காந்தியார் பாரதியார் உட்பட. ஆனால் இந்த இரண்டுக்குமான இணைப்பையும், அதற்கு மூலகாரணமாக இந்து மதமும் அதனுடைய பார்ப்பனிய தலைமையும் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் புரிந்து கொண்ட தலைவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான்.
எனவேதான் இந்துச் சட்டத்தைத் திருத்தாமல் பெண்களுக்கு விடுதலை வாங்க முடியாது என அம்பேத்கர் அறிந்திருந்தார். அம்பேத்கர் முன்மொழிந்த உரிமைகளை அடுத்த பத்தாண்டுகளில் பெண்கள் சமுதாயம் பெற்றுவிட்டது. தனித்தனியாய்ப் பல்வேறு சட்டங்களாக அவை பின்னாளில் நிறைவேற்றப்பட்டன.
பெண்கள் உரிமைகளுக்காகச் சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பிப் போராடி, தனது பதவியையே அவற்றிற்கு விலையாகத் தந்தவர் டாக்டர் அம்பேத்கர் . ஓட்டுரிமையைக் கூட அம்பேத்கர் சட்டம் இயற்றியதால் தான் நாம் போராடாமலே பெற்று விட்டோம்.
No comments:
Post a Comment