1947 ஆகஸ்ட் 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்து பிரதமராக நேரு பதவி ஏற்றதும், அவர் உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருந்தன. வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவில் 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன.
வெள்ளையருக்கு வரி கட்டிக்கொண்டு ஆட்சி நடத்தி வந்த சமஸ்தான மன்னர்கள், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தங்கள் சமஸ்தானம் சுதந்திர நாடுகளாக இருந்து வரவேண்டும் என்று எண்ணினர்.
"திருவாங்கூர் சமஸ்தானம் தனி சுதந்திர நாடாக இயங்கும்" என்று அந்த சமஸ்தானத்தின் திவானாக அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் அறிவித்தார். இந்தியாவுக்குள் உள்ள சுதேச சமஸ்தானங்கள், இந்திய யூனியனில் இணைந்து விடவேண்டும் என்று இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இந்தியாவுடன் இணைய முன்வந்தன. மற்ற சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை "துருப்பிடித்த மனிதர்" என்று பெயர் பெற்ற உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் நேரு ஒப்படைத்தார். படேல் இந்துமகா சபை இயக்கத்தின் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
பட்டேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய சம்மதித்தன. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் "சுதந்திரமாக இருப்போம்" என்று கூறினர்.
தமிழ்நாட்டில் இருந்த ஒரே சுதேச சமஸ்தானம் புதுக்கோட்டை. அதை அன்றைய மன்னர் ராஜா ராஜ கோபால தொண்டமான் 1948 மார்ச் 3_ந்தேதி இந்தியாவுடன் இணைத்தார்.
ஐதராபாத் சமஸ்தானத்தை முஸ்லிம் மன்னரான நிஜாம் ஆண்டு வந்தார். ஆனால், அந்த சமஸ்தானத்தில் வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்.
"இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்" என்று பட்டேல், மவுண்ட்பேட்டன் போன்றவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தார் நிஜாம். நிஜாமுக்கு பாடம் கற்பிக்க பட்டேல் முடிவு செய்தார். 1948 செப்டம்பர் 13_ந்தேதி, ஐதராபாத்துக்குள் இந்தியப்படை நுழைந்தது. மூன்றே நாளில் அடி பணிந்தார் நிஜாம். ஐதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. (பிற்காலத்தில் ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் சேர்க்கப்பட்டது).
குஜராத்தில் உள்ள ஜூனாகத் சமஸ்தானம் ஒரு முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. அங்கிருந்த இந்துக்கள், மன்னருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அதனால் மன்னர் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தச் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர் ஒரு முஸ்லிம். அவர், ஜூனாகத் விவகாரத்தில் உடனடியாகத் தலையிடும்படி இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
பூகோள ரீதியில் அதை இந்தியாவுடன் இணைப்பதே சரி என்று கருதப்பட்டது. என்றாலும் மக்கள் கருத்தை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். எனவே ஜூனாகத் இந்தியாவுடன் இணைந்தது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதில் பிரச்சினை ஏற்பட்டது. ஜூனாகத் மக்களுக்கு கொடுக்கப்பட்டது போல் எந்த உரிமையும் காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் தனி சுதந்திரம் தானே விரும்புகின்றனர்.
- தொடரும்
No comments:
Post a Comment