மொழியே தெரியாமல் இருந்தாலும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சிறு ஒட்டுதல் கூட தமிழில் ஏன் இல்லை என பலரும் கேட்கிறார்கள். காரணம் தமிழ் கிரிக்கெட் வருணணையில் இருப்பது ஆங்கிலம் கலந்த பார்ப்பன மொழி.
“அரவுண்ட த விக்கெட்ல(around the wicket) போட்டுண்டுருக்காரு, அல்ட்ரா எட்ஜ்(ultra edge) நன்னா காமிக்கர்து, சிக்சர் போயிடுத்து, 4 வந்துடுத்து, பிரண்ட் ஃபூட்(front foot) வந்து ஆடுறச்சே நன்னா…., அவா ஜெயிச்சிருவானு கிளியரா தெரிஞ்சுண்டுருக்கு..”
ஹேமங் பதானி, கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், பத்ரிநாத், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் என்ற பெயரில் ஒரு அக்கிரஹாரத்தையே களமிறக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனம்.
வர்ணனை என்ற பெயரில் பார்பனத் தமிழைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் காதுகளை கர்ண கொடூரமாக பதம் பார்க்கிறது மேற்படி கூட்டணி. ஆர்.ஜே.பாலாஜியே பரவாயில்லை எனும் நினைக்கும் அளவுக்கு நம்மை தாக்குகிறார்கள்.
“என்ன மாமா ஆத்துல அத்திம்பேர் சௌக்கியமா இருக்காளா?” என்று ஐ.பி.எல் வர்ணனையில் இன்னும் பேசப்படவில்லை. அதையும் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம். இதை தவிர பந்து உஸ்ஸ்ஸ்-னு போகுது, மூக்கு மேல ராஜா என இவர்கள் அடிக்கும் மொக்கை வர்ணனைகள் கேட்பவர்களை எரிச்சலூட்டுகின்றன.
பொதுவில் நாம் எந்த வட்டார வழக்கு பேசினாலும் ஒரு மேடையில் பலர் முன்னிலையில் பேசும்போது நாம் அனைவருக்குமான பொதுத் தமிழ் மொழியில் தான் பேச ஆரம்பிப்போம்.
அது இயல்பு. ஆனால் பல லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் அக்கிரஹாரத்து மொழியை எந்த கூச்சமும் இன்றி பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடுபவர்கள் முதல் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் ‘அவா’- க்களாக இருப்பதால் கிரிக்கெட் சங்க தாழ்வாரங்கள் இயல்பாக அக்கிரஹாரங்களாகவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றன. அதனால் அக்கிரஹாரத்து மொழியும் அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.
இப்பார்ப்பன மாமக்களின் வர்ணனைகளைவிட சிறுநகரங்களில் ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை சிறப்பானதாக இருக்கிறது. “முன் சென்று தடுத்து ஆடினார் (front foot defence)” “மட்டையாளரை ஏமாற்றி காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது”. “பந்து எல்லைகோட்டை தாண்டியது. நான்கு ஓட்டங்கள்” என இவ் வர்ணனைகள் சிறப்பானதாக இருக்கும். இவை சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் போன்றவர்களின் வானொலி கிரிக்கெட் வர்ணனைகளை பிரதியெடுத்து பேசப்படுபவை. நீங்கள் தஞ்சை, திருநெல்வேலி என வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றாலும் ஒரே மாதிரியான வர்ணனைகளை பார்க்க முடியும்.
பார்ப்பன மொழி என்பதையும் தாண்டி கடந்த 10-ஆம்(10-5-2018) தேதி நடைபெற்ற டெல்லி vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள் இப்பார்ப்பன முன்னாள் வீரர்கள். காரணம் டெல்லி அணியில் விளையாடும் ஸ்ரேயஸ் ஐயர் என்ற வீரர். அவர் பெயரின் பின்னொட்டை பார்த்ததும் வர்ணனையில் இருந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“……ஸ்ரேயஸ் ஐயர்…..நானும் ஐயர் தான். என் பெயர் சிவராமகிருஷ்ண ஐயர்” என்ற பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேரடி வர்ணனையில் தன் சாதியை தெரிவிக்கிறார்.
கடந்த (17-05-2018) நடைபெற்ற ஹைதராபாத் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தான் ஒரு மாத்வா பிராமின் என வர்ணனையில் தெரிவித்தார் அபினவ் முகுந்த என்ற கிரிக்கெட் வீரர்.
சாதி வெறியனாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் சாதி பெயர் கேட்பது நாகரிகமற்றதாக கருதப்படுகிறது. ஆனால் எந்த நாகரிகமும் இல்லாமல் ஐயர் என்பதை ஏதோ முனைவர் பட்டம் போல பெருமைமிகு அடையாளமாக கூறி அற்ப சந்தோசமடைவதை பார்ப்பனத் திமிர் என்று தான் அழைக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டி ஒன்றில் ஒரு வீரர் பந்து பிடிப்பதை தவற விட்டுவிட்டார். அப்போது ஶ்ரீகாந்தின் வர்ணனை.“ விட்டுடான்… ஐயோ…நாராயணா,வாசுதேவா…” என்று பார்த்தசாரதி கோவில் தெரு மாமாக்களை நினைவுபடுத்தினார்.” ஓ மை காட்” என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாராயணா வாசுதேவா என்று தமிழ்படுத்தியிருக்கிறான் பார்ப்பன ஶ்ரீகாந்த்.
விட்டால் ஆங்கில வழக்கை சுதேசிப்படுத்தியிருப்பதாக நம்மிடம் படுத்தினாலும் படுத்துவார்கள். சிவராமகிருஷ்ண ‘ஐயரி’-ன் மேற்படி கூற்றுக்கு ஒரு ‘ஐயங்காரரி’-ன் எதிர்வினையாகவும் இதை பார்க்கலாம். சைவ-வைணவ, ஐயர்-ஐயங்கார் சண்டை அங்கேயும் தொடர்கிறது போலும்.
ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் சாதி வெறியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். சாதி வெறிக்கு இடமளித்ததற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு இப்பார்ப்பன வெறியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
பொதுவில் தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துகொள்வது இழிவானது நாகரிகமற்றது என்று கருதப்படுகிறது.
அதனால் தான் சாதிவெறி கட்சி நடத்தினாலும் கொங்கு ஈஸ்வரனுக்கும், ராமதாஸ்களும் தமது பெயரில் சாதி பின்னொட்டை சேர்க்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் சாதி வெறியர்களோ – சாதி அபிமானம் கொண்டவர்களோ, பொது இடங்களில் தமது சாதியை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கப்பதற்கு சிரமப்படுகிறார்கள்.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஐ.பி.எல் வர்ணனையில் சாதி பெயரை தெரிவித்தது ஒரு உதாரணம் தான்.
சாதி பெயர் கேட்கப்படாத ஐ.டி அலுவலகங்களிலும் இதை பார்க்க முடியும். அங்கு ஒரு தேவர் மற்றொரு தேவரையோ, நாடார் நாடாரையோ கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு அக்கவலையில்லை.காரணம் அவர்களின் பார்ப்பன மொழி, பண்பாடு. அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.
பார்ப்பன மொழியை மீறி வேறு சில உபாயங்களையும் வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அணு குண்டு வெடித்தவர்களாயிற்றே! ஐ.டி நிறுவன டீமில் புதிதாக சேருபவர்களில் ‘அவா’க்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கு ஒரு கையேடே வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக பேசிகொண்டிருக்கும் இடத்தில் “கொஞ்ச நாளா நான் சந்தியாவந்தனமே பண்றதில்லை”
“என்ன பாஸ் இன்னிக்கு லேட்.”
“வீட்டுல ஆவணி அவிட்டம்”
“உங்களுக்குமா எங்களுக்கும் ஆவணி அவிட்டம்”…… புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள், புதிய மனுதர்மக் கூட்டணிகள் உருவாகி விடும்.
இல்லையென்றால் கட்டிப்பிடிக்கும் “ஹக்” கலையின் மூலம் உள்ளே நெளியும் பூணூலை பாசத்தோடு அடையாளம் காண்பார்கள்.
பிறகு என்ன, அவா, இவா, ஆத்துல, காயத்ரி மந்திரம், தோப்பனார், அத்திம்பேர் என்று அவாளது கலைக்களஞ்சியம் கொஞ்சி விளையாடும். இந்த அவாள் மொழி பேசினால்தான் நாகரிகம் என்று சிலபல சூத்திரர்களும், பஞ்சமர்களும் முயற்சி செய்யும் சோகம் தனிக் கதை.
தொலைக்காட்சிகளிலும், சினிமா உலகிலும் கூட இந்த பார்ப்பனியமயமாகும் தமிழின் அவலத்தைக் கேட்கலாம்.
கிரிக்கெட்டில் ஐ.பி.எல். என்ற 20-20 வடிவம் ஒரு நவீன வடிவம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல ஐ.டி. வேலையும் அதன் வாழ்க்கையும் நவீனம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு நவீனத்திலும் தொடர்பு மொழி என்னவோ பழைய பார்ப்பன பஞ்சாங்கங்கள்தான்.
No comments:
Post a Comment