ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது.
ஆனால் 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை, கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம், ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும், தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.
காஷ்மீரின் இந்து மன்னர் ஆட்சியாலும், இந்திய அரசாலும் 11 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா
ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா.
காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார்.
ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.
1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள்.
ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.
மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.
தொடரும்...
No comments:
Post a Comment