1947 அக்டோபர் 26 அன்று இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் சாரம் என்னவெனில்,
1. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகியன மட்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்,
2. ஊடுருவல்காரர்களை விரட்டிய பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்,
3. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தியாவுடனான இந்த இணைப்பு இறுதியாகும்.
இதனடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை நேரு வானொலியில் நவம்பர் 2 அன்று அறிவித்தார். இதன் பிறகு இந்தியாவின் ராணுவம் பதான்களையும் பாகிஸ்தான் ராணுவத்தையும் விரட்டி அடித்தது. அப்போது ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தம் வந்தது. எந்தெந்த படைகள் எங்கெங்கு நிலை பெற்றுள்ளதோ அது வரை அந்த நாட்டிற்கு சொந்தம் என்கிற அடிப்படையில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வரையப்பட்டது. காஷ்மீர் இரண்டாக பிளக்கப்பட்டது. ஒரு நிரந்தர பதட்டம் அங்கு நிலவ ஆரம்பித்தது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் நேரு வாக்கெடுப்பு நடத்தாமல் காலங்கடத்தினார். இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்தத்தின் சரத்துகளை மீற ஆரம்பித்தது, வாக்கெடுப்பும் நடத்தவில்லை. 1956 நவம்பர் 17 ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்டது
ஆனால் 1957 ஜனவரி 27 அன்று ஐ.நா சபை “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தை எந்த வகையிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒருமித்த கருத்தாக கருத முடியாது” என்ற அறிவித்தது. அதாவது இந்த இணைப்பை ஐ,நா சபை அங்கீகரிக்க வில்லை.
இங்கு ஒரு விசயத்தை நாம் யோசிக்க வேண்டும், ஊடுருவல் சமையத்தில் பதான்களும், பாகிஸ்தானிய ராணுவமும் கட்டவிழ்த்த கொலை, கொள்ளை, தீவைப்பு, பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றால் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் மீது இயல்பாகவே ஒரு வெறுப்பு அலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் ஒரு வேளை காஷ்மீர் மக்கள் இந்திய இணைப்பை ஆதரித்திருக்கக்கூடும். அந்த வாய்ப்பையும் நேரு தவற விட்டார்.
1957 லிருந்து 1972 வரையிலும் நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் இந்தியா எல்லா தகிடு தத்தங்களும் செய்து தனக்கு சாதகமான பொம்மை முதல்வரை அங்கு ஏற்படுத்தியது. 1977 தேர்தலில் ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைத்தது.
ஷேக் அப்துல்லா முதல்வரானதும் காஷ்மீரில் குறிப்பிடத்தக்க சில சீர்திருத்தங்களை செய்தார்.அதில் முக்கியமானது நிலச் சீர்திருத்தம் .இதன் படி உச்ச பட்ச வரம்பிற்கு மேல் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் அப்துல்லாவின் செல்வாக்கு அப்பகுதியில் பெருகியது. இருந்தாலும் அப்போதைய ஜமீன்தார்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களாக இருந்ததால் அப்துல்லாவின் மதசார்பற்ற இந்த சோஷலிச மறுபகிர்மானம் துரதிர்ஷ்டவசமாக மதச்சாயம் பூசப்பட்டது. இந்த வேலைகளை பிரஜா பரிசத் என்கிற இந்துத்துவா அமைப்பு ஆத்ம சுத்தியுடன் செய்தது.
1987 தேர்தலில் ஷேக் அப்துல்லா மறைவுக்கு பின்னர் அவரது மகன் பரூக் அப்துல்லா தலைமையில் தே. மா.கட்சி மீண்டும் வெற்றி பெற்றது .ஆனால் பரூக் சுதந்திர காஷ்மீர் கொள்கை உடையவராக இருந்ததால் அப்போதைய பிரதமர் இந்திரா தே.மா கட்சியில் பிளவை ஏற்ப்படுத்தினார்.
13 உறுப்பினர்களுடன் வெளியேறிய பாருக்கின் மைத்துனர் குலாம் முகம்மது காங்கிரசின் 26 உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு ஆட்சியை கோரினார் .ஆனால் அப்போதைய ஆளுநர் பி.கே.நேரு இதை அனுமதிக்கவில்லை. விடுவாரா இந்திரா? 1984 இல் பி.கே.நேருவை நீக்கிவிட்டு தீவிர இந்துத்துவா கொள்கையுடைய ஜக்மோகனை ஆளுனராக்கினார். ஜக்மோகன் வந்த கையேடு பரூக்கை நீக்கிவிட்டு குலாமை முதல்வராக்கினார். பிறகு ஆறு மாதத்தில் குலாமையும் நீக்கி விட்டு ஆளுநர் ஆட்சியை பிரகடனம் செய்தார்.
அது முதல் ஜக்மோகன் காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்தும் எல்லா வேலைகளையும் ஆத்ம சுத்தியுடன் செய்தார். ஜக்மோகன் ஆட்சியில் நடைபெற்ற மற்றுமொரு முக்கிய நடவடிக்கை பண்டிட்டுகள் வெளியேற்றம். அதாவது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி அவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்.
இந்த வேலைகளை திட்டமிட்டு மிகுந்த வஞ்சகத்துடன் காய்களை நகர்த்தி செய்து முடித்தார். அதாவது இப்படி சொல்வதன் மூலம் காஷ்மீரில் பண்டிட்டுகளின் மேல் தாக்குதல் நடைபெறவே இல்லை என்று நாம் கூற வரவில்லை. ஒப்பீட்டளவில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த மோதல்களை பூதாகரமாக ஊதிப் பெரிதாகியதில் ஜக்மோகனும் ஊடகங்களும் பெரும்பங்காற்றின. புது டில்லியில் முக்கிய வணிகப் பகுதியில் கடைகள், வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, உதவித்தொகை எல்லாம் வழங்கப்படும் என கூறி பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை ஊக்குவித்தார்.
பண்டிட்டுகளை வெளியேற்றியதன் மூலம் காஷ்மீர் தேசிய இன மக்களின் போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறி மதச்சாயம் பூசி அம்மக்களை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் வெற்றி பெற்றார்.
இந்திய ஜனநாயகத்திலும் தேர்தல்களிலும் ஏற்கனவே நம்பிக்கை இழந்திருந்த காஷ்மீர் இளைஞர்கள் பலரை சில பிரிவினைவாத சக்திகள் மூளைச்சலவை செய்து தீவிரவாத குழுக்களில் இணைத்தனர், தினம் தினம் .
பல தீவிரவாத செயல்களையும் அரங்கேற்றினர். இந்த தீவிர வாத குழுக்களை ஒடுக்குவதற்கு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (armed force special power act ). அதாவது இந்த சட்டத்தின் மூலம் யார் ஒருவரையும் கேள்விகள் இன்றி ராணுவமோ போலீசோ கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ அதிகாரம் அளிக்கப்பட்டது.
இன்று வரையிலும் இந்த சட்டம் அமலில் இருந்து அம்மக்களின் இயல்பு வாழ்கையை, இறையாண்மையை, சுதந்திரத்தை, சமூகப் பாதுகாப்பை கேள்விக்குறியாகவே வைத்திருக்கிறது.
உலகிலேயே ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம்’ என்ற ஒரு அமைப்பு இருப்பதும், செயல்படுவதும் காஷ்மீரில் மட்டும் தான், இதிலிருந்தே அந்த சட்டத்தை அதிகார வர்க்கம் எந்த அளவிற்கு முறைகேடாக பயன்படுத்தி இருப்பர் என்று சாமானியனுக்கு கூட புரிந்து விடும்.
- தொடரும்
No comments:
Post a Comment