ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் வேத புத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. ஒருபோதும் மறுக்கவும் மாட்டார்கள்.
அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறான். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம்? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் லட்சணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர்.
ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.
அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”
கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறான். கோல்வாக்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறான். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இதை பின்பற்றுபவர்கள் தான் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
ஆதாரம் - (கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)
Douglas Muthukumar
No comments:
Post a Comment