Tuesday, July 31, 2018

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களும் - பா.ஜ.க அரசின் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டங்களும்...

பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao (BBBP) – பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்று 22.01.2015 அன்று ஆர்ப்பரித்தார் மோடி. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பிரிவுகள் ஆணையம் (NCRB) அளித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் (பாலியல் குற்றங்கள் உட்பட) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன.

2014-ஆம் ஆண்டில் 89,423 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 94,172 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 1,06,958 குற்றங்களும் என வருடத்திற்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சதவிகிதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2014-இல் 20.1% , 2015-இல் 21.1% மற்றும் 2016-இல் 24.0% என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

2012-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 37,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 4,954 வழக்குகளுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும், 4,815 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 4,717 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதே மூன்று மாநிலங்களும் தான் குழந்தை கடத்தலிலும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இந்தியா முழுவதும் பதியப்பட்டுள்ள 54,723 குழந்தை கடத்தல் வழக்குகளில், உத்திரப்பிரதேசத்தில் 9,657 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 7,956 வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 6,016 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-இல் 10,854 ஆக இருந்து 2016-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி 19,765 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2016-ஆம் ஆண்டில் 42,196 நபர்களுக்கெதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 3,859 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறியப்பட்டுள்ளனர் மேலும் 9,111 பேர் இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வல்லுறவு குற்றவழக்குகளில் 24,007 பேர் கைது செய்யப்பட்டு 2,241 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுனர், 5,693 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில்  பெருநகரங்களைப் பொருத்தவரையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகப்படியான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த மூன்று வருடங்களில் எண்ணிக்கை அளவில் ஒப்பிடும்போது, டெல்லியில் நடக்கும் குற்றங்கள் சிறு அளவில் குறைந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ ஆகிய நகரங்கள் பெண் குழந்தைகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.  இந்த நகரங்களில் குற்றங்களின் விகிதாச்சார  எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருப்பது வாழ்வதற்கான சூழல் மிகவும் மோசமாகி வருவதை வெளிப்படுத்துகிறது.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில், மிக மோசமான மாநிலங்களாக உத்திரப்பிரதேசமும் அதைத் தொடர்ந்து மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழிப்பதில் மிக மோசமான இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 2,479 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி சீரழிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக மராட்டியம்(2,333), உத்திரப்பிரதேசம்(2,115), ஒடிசா(1,258), மேற்கு வங்கம்(719) என இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

இப்போது பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் திட்டத்திற்கு வருவோம். சுமார் 100 கோடி முதலீட்டில் பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் இருக்கிறது.

இந்தத் திட்டத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக 28.06.2015 அன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனேயே #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது என்பது வரலாறு.

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து மோடி அண்ட்-கோ-விற்கு தெரியாதா என்ன? ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக இவையெல்லாம் செல்பிக்காக, பிரபலத்துக்காக ஏங்கும் உயர்தர நடுத்தட்டு வர்க்கங்களுக்காகவென்றே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சில நிகழ்வுகள் அவ்வளவே..

இதையன்றி இதே சமயத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம், நாட்டு வளங்களைத் தனியார், தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கலாம், கோமாதாவின் பெயரால் அப்பாவி முசுலீம்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் இவ்வளவு ஏன் அன்றைய தினம் எத்தனையோ இளம்பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு ஏன்? பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் என்று ஆர்ப்பரித்த மோடி, சமீபத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசிபா குறித்தோ, அல்லது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி குறித்தோ வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பா.ஜ.க.-வும் அதன் அமைப்புக்களும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது கண்கூடாக நிரூபிக்கப்பட்ட போதிலும் மோடியின் இதயம் கணக்கவில்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் எல்லாம் நம்மை எளிதில் தன்வயப்படுத்திக் கொள்ளும்; ஆனால் இதனால் சமூக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்குத்தனமான நாம் வாழும் இந்த சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன.

பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.

இச்சீரழிவுகளை முறியடிக்க குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குற்றங்களைச் செய்வோரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் போது மக்கள் சட்ட ரீதியான போராட்டங்களோடு பா.ஜ.க அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம்.

No comments:

Post a Comment