வன்கொடுமை சட்டத்தை ‘பழி தீர்க்கும் வழியில்’ தலித் மக்கள் பயன்படுத்துவதாக கூறி அதன் அடிப்படையில் இனி குற்ற வழக்குகள் பதியக்கூடாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
புள்ளிவிவரங்களை பார்க்கும் போது நாடு முழுதும் தொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாதி வன்கொடுமை வழக்குகளில் ஒரு சில விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுகின்றனர். உண்மையில் அந்த சட்டமே இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? தலித் மக்கள் மீது வடக்கு தெற்கு என்று பேதமில்லாமல் சாதிய வன்கொடுமைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
மோடியின் ஆட்சியில பார்ப்பனிய ஆதிக்கம் என்பது முன்னிலும் வலுவாக மக்களை ஒடுக்கி வருகிறது. கீழ்க்கண்ட மூன்று சம்பவங்களும் அதை உறுதி படுத்துகின்றன.
1. தலித்துக்கள் குதிரையில் ஏறத் தடை – இராஜஸ்தானில் ஆதிக்க சாதியினர் வெறிச்செயல்!
குதிரையில் ஏறிச்சென்ற ஒரே காரணத்திற்காக இராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்ஜார் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் பிந்துலி எனும் சடங்கின் போது தான் இத்தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.
“தன்னுடைய இளைய சகோதரன் உதய் லாலின் திருமணச்சடங்கிற்காக குதிரையை வரவழைக்க முடிவு செய்த போது கிராமத்திலிருந்த ஆதிக்க சாதியினரிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வந்தன. நாங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தப்பிறகு அவர்கள் எங்களது பாதுகாப்பிற்காக வந்தார்கள். ஆனாலும் தாக்குதல் நடக்கும் போது அவர்கள் எதுவும் செய்யவில்லை” என்று மணமகனின் மூத்த சகோதரர் பன்வார் லால் ரேகர் கூறுகிறார்.
ரேகரை பொருத்தமட்டில் இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி அல்ல. ஏற்கனவே 2010-ம் ஆண்டில் அவரது சகோதரரின் திருமண நிகழ்வில் இதே போலவே கடுமையாக எதிர்த்து கல்லால் ஆதிக்க சாதியினர் அவர்களை அடித்தனர்.
மகராஷ்டிரா, ரட்லமில் 2015-ம் ஆண்டு இதே போன்றதொரு நிகழ்வில் கல்லெறிந்த ஆதிக்ககச்சாதியினர் சடங்கு குதிரையைத் திருடி சென்று விட்டனர். பின்னர் மற்றொரு குதிரையில் மணமகனுக்கு தலைக்கவசம் அணிந்து சடங்கை நடத்தினர் தலித் மக்கள். அதே போல ஹரியானாவை சேர்ந்த தலித் மணமகன் ஒருவர் குர்சாரி எனும் சடங்கை செய்த போது இராஜபுத்திர ஆதிக்க சாதியினரால் கல்லால் அடித்து தாக்கப்பட்டார்.
2.உத்திரப்பிரதேசத்தில் தலித் ஒருவரை மூத்திரத்தை குடிக்க செய்த ஆதிக்க சாதிவெறி!
தங்களுடைய நிலத்தில் வேலை செய்ய மறுத்த ஒரே காரணத்திற்காக உத்திரப்பிரதேசம், பதானை சேர்ந்த தலித் விவசாயக்கூலித் தொழிலாளி ஒருவரை தாக்கூர் ஆதிக்கச்சாதியினர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வால்மீகி சமூகத்தை சேர்ந்த சீதாராம் தன்னுடைய 10 பிகா நிலத்தில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த விஜய் சிங், பிங்கு சிங், ஷைலேந்திர சிங் மற்றும் விக்ரம் சிங் முதலான தாக்கூர் சாதி வெறியினர் தங்களுடைய 20 பிகா வயலில் முதலில் அறுவடை செய்யுமாறு கூறினர். ஆனால் தன்னால் முடியாது என்று சீதாராம் கூறினார்.
சீதாராம் அப்படி கூறியதை தாங்க முடியாத ஆத்திரத்தில் நால்வரும் அவரை அடித்து உதைத்ததுடன் சாதிப்பெயரை சொல்லியும் திட்டியுள்ளனர். பின்னர் கிராமத்தின் பொது இடத்திற்கு இழுத்து வந்து அங்கிருந்த ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்து அவரது மீசையை எடுத்ததுடன் மூத்திரத்தையும் குடிக்க வைத்துள்ளனர்.
இதுப்பற்றிய புகாரை காவல்துறையினரிடம் அவரின் மனைவி ஜெய்மாலா கொடுத்ததால் அன்று இரவு அவரது வீடு ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டது. காவல்துறைக்கு மீண்டும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையோ விஜய் சிங்குடன் சீதாராமையும் சேர்த்து கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது.
இதுப்பற்றி வெளியே செய்தி கசிந்தவுடம் சீதாராமைத் தாக்கிய மீதி ஆதிக்க சாதியினரையும் கைது செய்தது காவல்துறை. மேலும் ஆதிக்கச்சாதியினருக்கு உடந்தையாய் இருந்த அப்பகுதி காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரியை இடைநீக்கம் செய்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.
3. தலித் பெண்ணை கோவிலுக்குள் நுழைய விடாத புதுச்சேரி ஆதிக்கசாதியினர்!
புதுச்சேரி அருகே குனிச்சம்பேட்டை தலித் காலனியை சேர்ந்த பெண்ணான இராதா கோவிலுக்குள் நுழைய விடாமல் வெளியேற்றப்பட்டது பற்றிய காணொளி ஒன்று டிவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி சமதா பூதண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 20 நாள் திரௌபதியம்மன் திருமண விழாவில் தான் இக்கொடுமை அரங்கேறியுள்ளது.
அக்காணொளியின் படி, வழிபாடு முடிந்தவுடன் சென்று விடுகிறேன் என்று கூறுகிறார் அப்பெண். ஆனால் “இங்கே வருவதற்கு உனக்கு அனுமதி கிடயாது. உங்களது கோவிலுக்கு நாங்கள் வரமாட்டோம் அதே போல எங்களது கோவிலுக்கும் நீங்கள் வரக்கூடாது” என்று கூறி வெளியேற சொன்னார்கள்.
“உங்க சாமி எங்க சாமி என்றும் ஒன்னும் கிடையாது” என்று அப்பெண் வாதிடுகிறார். மேலும் “எல்லோரும் ஒன்று தான். சாமி கும்பிட்டுவிட்டு சென்றுவிடுகிறேன். சாமி கும்பிட மட்டும் விடுங்கள்” என்று அவர் கூறினார். ஆயினும் அக்கோவிலில் இருந்தவர்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்.
அக்கோவிலில் ரெட்டியார், வன்னியர், முதலியார் உள்ளிட்ட சாதி இந்துக்கள் மட்டுமே சடங்குகள் செய்கிறார்கள். தலித் மக்களுக்கு அக்கோவிலில் உரிமை இருந்தாலும் அவர்களை உள்ளே விடுவதில்லை.
No comments:
Post a Comment