Tuesday, July 31, 2018

காஷ்மீரில் கலந்த இந்துத்துவா அரசியல் - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் - பகுதி 12

ஆண்டுகள் பல கடந்த பின்னும் இந்திய அரசு கருத்துக் கணிப்பு பற்றி வாய் திறக்காத நிலையில் அது குறித்த கவலையை காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா பொது வெளிகளில் வெளிப்படுத்தத் தொடங்கினார்.

அவரது ‘தேசிய மாநாட்டுக் கட்சி’ இது குறித்து தீர்மானங்களையும் இயற்றியது. 1952 ஏப்ரல் 10 அன்று ஷேக் அப்துல்லா ஆற்றிய ரண்பீர் சிங் உரையில் இது குறித்து வன்மையாகத் தன் கருத்தை முன்வைத்தார்.  இதை ஒட்டி நேரு பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். 1952 ஜூலை 24 அன்று காஷ்மீர் பிரச்சினையில் இன்னொரு எல்லைக்கல்லான “டெல்லி ஒப்பந்தம்”  நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் நிறைவேற்றப் பட்டது.

இந்த ஒப்பந்தப் பிரிவுகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தோமானால் நேரு 370 வது பிரிவின் ஊடாக காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு உரிமைகளைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளதையும் ஷேக் அப்துல்லா அவ் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருக்கத் தவித்துள்ளதையும் காண இயலும்.
அடுத்த சில நாட்களில் (1952 ஆகஸ்ட்) சோன்மார்கிலிருந்து ஷேக் அப்துல்லாவிற்கு நேரு எழுதிய கடிதம் யாரையும் அதிர்ச்சி அடைய வைக்கும்.

கருத்துக் கணிப்பு சாத்தியமில்லை எனத் தான் 1948 லேயே முடிவு செய்துவிட்டதாக நேரு அதில் குறிப்பிட்டிருந்தார். அப்படியே கருத்துக் கணிப்பு செய்ய வேண்டுமானால் தற்போதுள்ள அரசு மற்றும் அரசியல் சட்ட அவை உறுப்பினர்களின் கருத்துக்களையே மக்களின் முடிவாகவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். 1948 லேயே கருத்துக்கணிப்பு சாத்தியமில்லை என நேரு முடிவெடுத்திருந்தால் அதை மறைத்துக் கொண்டு செயல்பட்டதேன்?

மக்கள் மத்தியில் சுய நிர்ணய உரிமை தொடர்பான கருத்துக் கணிப்பு என்பதில் மக்களுக்கு இடமில்லை என்றால் அதன் பொருளென்ன?

அது மட்டுமல்ல. இந்த அரசியல் சட்ட அவைத் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அறிந்தால்தான் இது எந்த அளவுக்கு மக்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்திய அவையாக இருந்தது என்பது விளங்கும். இந்தத் தேர்தலில் பள்ளத்தாக்கைப் பொருத்த மட்டில் தேசிய மாநாட்டுக் கட்சியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஜம்முவில் அப்படி எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில் ஜம்முவில் இந்துத்துவ அரசியல் தனது பிளவு வேலைகளைத் தீவிரமாக்கியது. இந்திய காஷ்மீர் இணைப்பு நடந்த பின்னணியில் ஜம்முவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பால்ராஜ் மதோக் ‘ஜம்மு பிரஜா பரிஷத்’ என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

தனது அகண்ட பாரத கனவை முன்வைத்து அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்திருந்த  பெரும்பான்மை முஸ்லிம்கள் புதிய ஒப்பந்தங்களின் ஊடாகவும், காஷ்மீர் தேசிய உணர்வின் ஊடாகவும் அதிகாரத்தில் பங்கு பெறுவதை ஆர்.எஸ்.எஸ் வெறுத்ததன் விளைவாகவே இந்த பிரஜா பரிஷத் இயக்கம் தொடங்கப்பட்டது.

தொடக்கம் முதலே இது காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370. வது பிரிவை நீக்குவது என்பதைக் கோரிக்கையாக வைத்து இயங்கியது. பிரிவினையை ஒட்டி உருவாகியிருந்த இந்து உணர்வை ஊதிப் பெருக்கி இந்துக்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்துவதில் அது வெற்றி காணத் தொடங்கியது.

காங்கிரசுக்குள் இருந்து கொண்டு நேரு காந்தி ஆகியோரின் மதச்சார்பற்ற அணுகல்முறைக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருந்த இந்துத்துவ சக்திகள் காந்தி கொலைக்குப் பின் காங்கிரசை விட்டு விலக நேந்தது.

ஒரே நேரத்தில் இந்துமகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் ஒருவர் இருக்க முடியாது என காங்கிரஸ் முடிவெடுத்ததன் விளைவு இது. 

நேரு அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்து இப்படிப் பதவி விலகிய சியாமா பிரசாத் முகர்ஜிதான்  இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான ‘பாரதீய ஜனசங் கட்சியை’ தொடங்கியவர்.. இந்தப் பின்னணியில்தான் 1952 ல் மதோக்கும் முகர்ஜியும் 370 வது பிரிவை நீக்க வேண்டும் என்கிற முழக்கத்தோடு காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார் ஷேக் அப்துல்லா. முகர்ஜி சிறையிலேயே மாண்டார். அது இயற்கை மரணமல்ல, திட்டமிட்ட சதி எனக் கூறி அதிலும் இந்துத்துவவாதிகள் அரசியல் லாபம் தேட முனைந்தனர்.

இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் இந்திய அரசுக்கும் ஏற்பட்ட முரண் தொடர்ந்து அதிகரித்து வந்தது.  1953 ஆகஸ்ட் 8 அன்று ஷேக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

நேருவுக்குப் பின் அதிகாரத்துக்கு வந்த இந்திரா நேருவின் போற்றத்தக்க பண்புகள் எதற்கும் வாரிசாக இருந்ததில்லை. நேருவிடம் இருந்த மதச்சார்பற்ற அரசியலும் அவரிடம் இல்லை. இந்திரா ஜனநாயகவாதியும் இல்லை; மதச்சார்பற்றவரும் இல்லை. தான் ஆட்சிக்கு வந்தபோது அப்பட்டமான இந்து மத அடிப்படைவாதத்தையும் தனக்குச் சார்பாகப் பயன்படுத்த அவர் தயங்கவில்லை.

தேசிய மாநாட்டுக் கட்சியை உடைத்து காஷ்மீரில் ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதற்கென அவரால் அங்கு ஆளுனராக அனுப்பப்பட்ட ஜக்மோகனின் ஆட்சியில்தான் காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகும் நிலை ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் அங்கு 1989ல் தீவிரவாதமும் தலை எடுத்தது.
ஜக்மோகன் இரண்டு முறை அங்கு ஆளுனராகப் பணி அமர்த்தப்பட்டார். முதல்முறை (1984 -89) அவரைப் பதவியில் அமர்த்தியது இந்திரா காந்தி.

பதவி ஏற்ற கையோடு தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து எடுபிடி பொம்மை அரசொன்றை அங்கு நிறுவினார். இரண்டாம் முறை (1990) அவரை ஆளுநராக அனுப்பியது வி.பி.சிங் அரசு. கூட்டணிக் கட்சியாக இருந்த பா.ஜ.கவின் வற்புறுத்தல் அதற்குக் காரணமாக இருந்தது.

இவரது ஆட்சியில் நடந்த காஷ்மீர் தேர்தல் (1987 மார்ச் 23) மிகப் பெரிய அளவில் ஏமாற்றும் பொய்யும் நிறைந்த ஒன்றாக இருந்தது என்பது உலகறிந்த ஒரு உண்மை. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுதல், வென்றவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுதல் என மிக வெளிப்படையாக இந்தத் தில்லுமுல்லுகள் நடந்தேறின.

30 சத வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் ஐக்கிய முன்னணி வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அப்படி அம்ரிக்தால் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னும் தோற்றவராக அறிவிக்கப்பட்ட ஷேக் ஜலாலுதீன் தான் முதன் முதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1980 தொடங்கியே சிற்சில வன்முறைகள், ஆட் கடத்தல்கள், கொலைகள் முதலியன நடந்தபோதிலும் மிகப் பெரிய அளவில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் முழு வீச்சுடன் செயல்பட்ட காலம் 1989 – 2003. இனி நீதி, நேர்மை, ஜனநாயகம், வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்தல் என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆயுதம் ஏந்துவது ஒன்றே வழி என்கிற நிலைக்கு காஷ்மீர் இளைஞர்கள் தள்ளப்பட்டது இப்படித்தான்.

இதற்கு முன்னும் சில வன்முறைகள் காஷ்மீரில் நடக்கத்தான் செய்தன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஷ்மீரக் கவிஞரும் போராளியுமான மெஹ்பூல் பட்டை விடுதலை செய்ய வேண்டும் என பிரிட்டனில் இருந்த இந்தியத் தூதராலயத் தலைவர் ரவீந்திர மேத்ரியைக் கடத்திக் கொன்றதும் (1986 பிப்), அதற்கு ஈடாக அடுத்த ஐந்தாம் நாள் மெஹ்பூல் பட்டை இந்திய அரசு தூக்கிலிட்டதும், அதற்குப் பழிவாங்க பட்டுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி நீலகாந்த் கொல்லப்பட்டதும் (1989 நவ) நடக்கத்தான் செய்தன.

ஆனால் இப்படி அங்கொன்ரும் இங்கொன்றுமான வன்முறை என்பதைத் தாண்டி, மறுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆயுதப் போராட்டத்தை ஒரு சாதனமாக (technique) ஏற்கும் அரசியல் நிலைபாடு காஷ்மீரில் உருவானது இப்போதுதான்.

இப்படியான தீவிரவாத அமைப்புகளாக முதலில் காதில் விழுந்த பெயர்கள் அமானுல்லாகானின் ‘ஜம்மு காஷ்மிர் விடுதலை முன்னணி’. பாக் ஆதரவு ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ ஆகியவைதான். அதற்குப் பின்தான் எத்தனை தீவிரவாத இயக்கங்கள்! அல்லாஹ் புலிகள், அல் உமர், அல்பராக், அல் ஜிகாத், அல், ஹாதித், ஹர்கத் உல் அன்சார், லக்‌ஷர் ஏ தொய்பா…

கடும் அடக்குமுறை ஒன்றின் மூலம் இந்த ஆயுதப் போரட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்பதுதான் இந்திய அரசின் அணுகுமுறையாக இருந்தது. ஆயுதப் படைகட்கும் காவல்துறைக்கும் வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFSPA – JK), 1990 ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டது.

- தொடரும்

No comments:

Post a Comment