Tuesday, July 31, 2018

பிபிரதாப் சிங் காஷ்மீர் ஆட்சி - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் - தொடர் 5...

ஒரு முறை மன்னர் பிரதாப் சிங்குக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசை உண்டானது. தனது அல்லக்கைகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு ஒரு அணியை உண்டாக்கி அதற்குத் தன்னையே தலைவராகவும் நியமித்துக் கொண்டார்.

காஷ்மீரில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் அணியுடன் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டி நடக்கும் நாளும் வந்தது. தலையில் பொன்னாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய தலைப்பாகையுடனும், மன்னருக்கான அலங்கார உடையுடனும், கழுத்தில் பல லட்சம் பெருமானமுள்ள நகைகளுடனும் களத்தில் இறங்கினார் மன்னர்.

மன்னர் சற்றுக் குள்ளமானவர் என்பதால், மேற்படி அலங்காரத்தோடும் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் இறங்கிய உருவத்தைப் பார்த்து, போட்டியைப் பார்க்க வந்தவர்கள் சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட்டனர். சிரித்தால் வாயைத் தாங்கிக் கொண்டிருக்கும் தலை துண்டிக்கப்பட்டு விடுமே! போட்டி துவங்கியது. அனைத்து ஏற்பாடுகளுடனும் மைதானத்துக்கு வந்திருக்கிறார் மன்னர்.

கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மட்டை பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற விசயம் மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.எதிரணியில் இருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கோ தர்ம சங்கடம்.

வேறு வழியின்றி குழந்தைக்கு பந்து போடுவதைப் போல, அல்லது லட்டுவைத் தூக்கிப் போடுவது போல மிக மெதுவாக மன்னருக்குப் பந்து ‘வீசினர்’. அதையும் அடிக்கத் தெரியாமல் ஒவ்வொரு பந்துக்கும் கிளீன் போல்டு ஆனார் மன்னர்.

மன்னரை அவுட்டாக்குவது ராஜத்துரோக குற்றமல்லவா? அவர் அவுட்டாகும் ஒவ்வொரு பந்தையும் “நோ பால்” என அறிவித்துக் கொண்டிருந்தார் அம்பயர்.

நோ பாலுக்கு ஒரு ரன் உண்டல்லவா? எனவே மன்னரின் அணி தொடர்ந்து ரன்களாக குவித்துக் கொண்டிருந்தது.

இவ்வாறாக நடந்த போட்டியின் இறுதியில் யார் வென்றது என்பதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment