Tuesday, July 31, 2018

பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – இதுதான் உங்க இத்த இந்தியா - இன்டியாஸ்பென்ட் பத்திரிக்கை ஆய்வு..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகின்றது. அதுவே மேற்குவங்கத்தில் 13 இலட்சமாகவும் பீகாரில் 12.5 இலட்சமாகவும் இருக்கிறது. நான்கில் ஒரு இராஜஸ்தான் பெண்ணிற்கு 18 வயது முடியும் முன்னரே திருமணம் நடக்கிறது.

மேற்குவங்கத்தில் பெண்களின் சராசரித் திருமண வயது 19.3 ஆக இருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் சராசரி திருமண வயது 19.4 ஆக இருக்கிறது.
உத்திரப்பிரதேசத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு இலட்சம் பெண்களில் 29 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

அடுத்தநிலையில் இராஜஸ்தானில் 23.9 பெண்களும், பீகார் மற்றும் ஜார்கண்டில் 21.4 பெண்களும் பலியாகின்றனர்.

இராஜஸ்தானில் ஐந்தாவது வகுப்பு செல்லும் முன்னரே 40 விழுக்காட்டு பெண் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்கள் கருதுவதை விட அதிகமாக பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவதால் பதின்மபருவத்தை எட்டும் முன்னரே திருமணம் செய்கின்றனர்.

இந்தியாவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்களுக்கு 18  வயதிற்கு முன்னரே திருமணம் செய்யப்படுகின்றது.
பதினைந்து வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும் இந்தியப்பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாகும் (2014-ம் ஆண்டின் படி). இது 2001 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1.7 இலட்சத்தை விட 88 விழுக்காடுகள் அதிகமாகும்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன

இந்தியாவில் ஆண்-பெண் பாலின விகித வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரியானாவில் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 834 பெண்களாகவும், அதுவே பஞ்சாப்பில் 846 ஆகவும் இருக்கிறது.

குறிப்பாக பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்திய (இந்து பேசும்) மாநிலங்களே பெண்களை ஒடுக்கி ஆளும் காட்டுமிராண்டித்தனத்தில் முன்னணியில் இருக்கின்றன.

பெண்ணை தாயாக போற்றும் இந்துத்துவ மரபின் உண்மை முகம் இதுவே.

15 வயது முதல் 25 வயது வரையிலான இந்தியப்பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் படிப்பறிவு மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்ற ஒரு பொது இலக்கை அடைவதில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் கூறுகிறது.

மோடியின் ஆட்சி ஆடி கார் கிடைக்குமிடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறதே அன்றி பெண்கள் முன்னேறும் நாடாக மாற்றவில்லை! மூச்சுக்கு மூச்சு பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்களுக்கு கழிப்பறைகள் என்று உச்சாடனம் செய்யும் ஆளும் வர்க்கம் நம் நாட்டின் சரிபாதி மக்களான பெண்களை எவ்வளவு கொடிய நரகத்தில் தள்ளியிருக்கின்றன என்பதற்கு இவ்விவரங்களே சான்று.

இந்துமதவெறியர்களின் இருப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை பெண்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு போரில் பெண்கள் படையாக கிளம்பி வரவேண்டும்!

No comments:

Post a Comment